அம்மாவின் வாசம்


அம்மாவின் வாசம்

இன்று சனிக்கிழமை என்பதால் அலுவல்கள் ஏதுமில்லை. இருந்தும் வெளியே வர வேண்டியதாய் போயிற்று கமலிக்கு. எறும்புகளாய் தார் ரோட்டில் மொய்த்துக் கொண்டிருந்த வாகன வரிசையில் தான் அவளும் ஊர்ந்துக் கொண்டிருந்தாள். இந்த மாதிரியான பீக்- அவர்ஸ்களில் தான் ஜனத்தொகை பெருக்கத்தைப் பற்றியெல்லாம் அவளுக்கு நினைவு வருகிறது. இந்த நெரிசலிலிருந்து எப்படியாவது தப்பிக் கொண்டால்‌ போதும் என்றிருந்தது.

ஒரு வழியாக பிரதான சாலையிலிருந்து ஒதுங்கி ஒரு விசாலமான வீதியினுள் நுழைந்தபோது பெருமூச்சு விடத் தோன்றியது அவளுக்கு. அங்கேயிருந்த கோவிலின் முன் வண்டியை நிறுத்திவிட்டு தன் மகள் ரீனாவை இறங்கச் சொன்னாள். அவளையும் அழைத்துக் கொண்டு தான் வந்திருந்தாள்.

"அம்மா, ஐஸ்கிரீம் வேணும்," என்றாள் ரீனா. அவளுக்கு எப்போதும் எங்கேயும் ஐஸ்கிரீம் வேண்டும். 

"வாங்கி தரேன் ரீனா," என்றாள் கமலி. 

"எப்போம்மா?" கேட்டாள் ரீனா மறுபடியும்.

"சாமி கும்பிட்டுட்டு சாப்பிட தான போறோம். அங்கே வாங்கி தரேன்," என்றபடியே ரீனாவின் குட்டிக் குட்டி விரல்களை பிடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள் கமலி. 

ரீனாவுக்கு ஐஸ்கிரீம் என்றால் அவ்வளவு பிரியம். கமலி விளையாட்டாய் கேட்பதுண்டு, 'ரீனா கண்ணு, உனக்கு அம்மா பிடிக்குமா ஐஸ்கிரீம் பிடிக்குமா?' என்று. அசட்டுத்தனமான கேள்வி தான். ஆனாலும் ரீனா சீரியஸாக பதில் சொல்லுவாள், 'ஐஸ்கிரீம் வாங்கி தர அம்மா தான் பிடிக்கும்' என்று.

இன்று கமலிக்கு பிறந்தநாள். முப்பது தொடங்குகிறது. இத்தனை ஆண்டுகளாக தோன்றியதில்லை. இன்று ஒரே நாளில் வயதாகிவிட்டதாய் தோன்றியது. கருவறையில் இருந்த இறைவனைப் பார்க்கையில் அவளுக்கு F.R.I.E.N.D.S சீரியலில் வரும் ஜோயி கேட்பதைப் போல கேட்க வேண்டும் போல் இருந்தது. 

"Why God, why are You doing this to us?" 

பொறுமையாக கும்பிட்டு விட்டு பிரகாரத்தை சுற்றி வந்துகொண்டிருக்கும் போது ரீனா கேட்டாள், "என்ன ஐஸ்கிரீம் வாங்கலாம்?"

"அங்கே போய் பாத்துக்கலாம் குட்டி," என்றாள் கமலி. இப்போதெல்லாம் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் அங்கமாக மாறிவிட்டதல்லவா ட்ரீட் வைப்பது. அப்படியாக தன் அலுவலக நண்பர்களுக்கு ட்ரீட் வைக்க தான் தன் ஆறு வயது‌ மகளுடன் வெளியே வந்திருந்திருந்தாள் கமலி. கோவிலுக்கு போய்விட்டு நேரே அங்கே வருவதாய் சொல்லியிருக்கிறாள். 

கோவிலினுள்ளிருந்து வெளிவந்தவுடன் ரீனா சொன்னாள், "இன்னிக்கு உன் பர்த்டே தானம்மா. டூ ஐஸ்கிரீம் வேணும் எனக்கு."

அவளால் ஒன்றைக்கூட முழுதாய் சாப்பிட முடியாது. ஆனால் குழந்தைகளின் ஆசைகள் எப்போதுமே பெரியதாக இருப்பது தானே. 

"ரீனா,"‌‌ என்று கொஞ்சியவாறே கமலி அவளைத் தூக்கியபோது அவளுக்கு கவனம் வேறுபக்கம் சென்றிருந்தது. 

"அம்மா, பூ வேணும்," என்றாள். கமலிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ரீனாவுக்கு இருக்கும் ஒரு சென்டிமீட்டர் நீள முடியில் பூவை எங்கே சிக்க வைப்பது? சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். அங்கே ஒரு வயதான பாட்டி பூ விற்றுக் கொண்டிருந்தார். சாமிக்கானப் பூக்கள் போக ரோஜா, மல்லிகைப்பூ, முல்லைப்பூ என எல்லாம் வைத்திருந்தார்.

கமலி ரீனாவுடன் அவரை அனுகினாள். ரீனாவுக்கு பூ வைப்பதில் இருக்கும் ஆவல் கமலிக்கு ஒவ்வொரு முறையும் ஆச்சரியமளித்தது. கமலிக்கு அவள் சிறுவயது நினைவுகள் மனக்கண் முன்னே நிழலாடின. அவளின் அம்மாவுக்கு பூக்கள் என்றால் கொள்ளைப்பிரியம். ரீனாவின் இப்போதைய ஐஸ்கிரீம் ஆவலைப் போல்.

அம்மா கொஞ்சமே இருந்தாலும் நெருக்கிக் கட்டி சென்டாய்தான் வைப்பாள். எங்கு கிளம்பினாலும் பூவில்லாமல் போவதில்லை. பூ வைக்கவெனவே அவள் கிளம்பி போன ஞாபகங்களும் கமலிக்கு இருந்தன. ஆனால் அவள் அப்படியே அதற்கு எதிர்மாறாய் வளர்ந்தாள். 

ஒருமுறை கமலியின் கல்லூரி காலத்தில், அவள் பாட்டி முல்லைப்பூக்களை தொடுத்துவிட்டு அதை அவளுக்கு வைத்தே தீர்வதென இருந்தாள். அவள் அன்று அணிந்திருந்த ஜீன்ஸ் டீ சர்ட்க்கு எங்கே பூ வைப்பது? பாட்டிக்குச்‌ சொன்னால் புரியவேயில்லை. அம்மா வைத்துக் கொள்கிறேன் என்றதற்கு பாட்டி, "நீ‌ எங்க சீவி சிங்காரிச்சுட்டு போற" என்று கேட்டுவிட்டாள். கமலிக்கே பாட்டி அப்படி கேட்டது வருத்தம் தான். கமலியின் அம்மா அதற்கு பிறகு மூன்று மாதங்கள் பூவே வைக்கவில்லை.

"ஏம்மா, உள்ளப் போகும் போதே கூப்டேனே. சாமிக்கு பூ வாங்கல," என்றார் அந்த பூ விற்கும் பாட்டி. அவர் குரல் கேட்டே தன் அம்மா வீட்டிலிருந்து கோவிலுக்கு முன் வந்து சேர்ந்தாள் கமலி.

"சாமிக்கு நிறையா பூ வெச்சிருந்தாங்க பாட்டி," என்று எனக்கு முன்னால் பதில் சொன்னாள் ரீனா. "எனக்கும் அம்மாவுக்கும் தான் இல்லை."

ரீனாவிற்கு யாரிடம் பேசவும் தயக்கமே இருப்பதில்லை. கமலியும் சிறுவயதில் அவளைப் போல் தான் இருந்தாக சொல்வார்கள். ஆனால் வளர வளர அமைதியும் தயக்கமும் அவள் கூடவே வளர்ந்துவிட்டது. அவளுக்கு தன் மகள் வளராமல் இப்படியே இருந்தால் என்ன என்று தோன்றியது. 

அந்த பூ விற்கும் பாட்டி சிரித்துக் கொண்டே எந்தப் பூ வேண்டுமென்றுக் கேட்டார். அரை முழம் மல்லிகைப்பூ போதுமென்றாள் கமலி. அந்த பாட்டி அவள் கேட்டதைக் கொடுத்துவிட்டு இலவசமாக இரண்டு பட்டன் ரோஸ்களை ரீனாவின் கையில் திணித்தார்.

வாங்கி விட்டு இருவரும் வண்டிக்கு வந்தார்கள். தனக்கு பட்டன் ரோஸ் வைத்துவிட வேண்டும் என்ற ரீனாவுக்கு அதை‌ எப்படியோ தலையில் வைத்துவிட்டபோது மறுபடியும் கமலிக்கு அவள் அம்மாவின் நினைவுகள் வந்தது.

அம்மாவைப் பார்த்து ஒரு வருடத்திற்கும் மேலாகியிருக்கும். அவ்வப்போது போனில் பேசுவதோடு‌ சரி. ரீனாவை வண்டியில் உட்கார செய்துவிட்டு மொபைலில் அம்மாவின் எண்ணைப் பதித்தாள். கால் டயலில் கடைசியாக பேசி ஒரு வாரம் ஆகிவிட்டதாக காட்டியது. இரண்டே ரிங்கில் அம்மா எடுத்தாள். 

"சொல்லு பாப்பா," என்ற அம்மாவின் குரல் அப்படியே தான் இருந்தது.

"இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?" என்றாள் கமலி.

"என்ன..." என்று யோசித்த‌ அம்மாவுக்கு நினைவுக்கு வந்துவிட்டது, ஆடி 24. "அட... மறந்தே போய்ட்டேன் பாரு. ஹேப்பி பர்த்டே," என்றாள்.

"இதுகூட மறந்துட்டீங்க. அவ்ளோ தான்... கொஞ்ச நாள் போனா என்னையும் ஞாபகம் இருக்காது," என்று பொய்யாக கோபித்துக் கொண்ட கமலியிடமிருந்து பேச வேண்டுமென்று போனை பிடுங்கிக் கொண்டாள் ரீனா. தன் மகள் பேசிவதைப் பார்த்துக் கொண்டேயிருந்த கமலிக்கு, 'சிறுமியாக இருக்கும் வரை எத்தனை சுலபமாக இருக்கிறது வாழ்க்கை' என்று தோன்றியது.

'அம்மாவுக்கு பூ வாங்குனோம்,' என்று ரீனா அம்மாவிடம் சொன்னபோது ஏதோ நெருடலாக இருந்தது. அவள் அம்மாவுக்கு அவளாக பூ வாங்கிக் கொடுத்த ஞாபகமே இல்லை. இப்போது கொடுக்க வழியில்லை. அப்பா மறைந்து ஆறு வருடங்கள் ஆகிறது. அம்மா பூ வைத்தும் தான். பெரும் குற்றம் செய்தவள் போல் உள்ளுர பொறுமினாள் கமலி. அவள் கையிலிருந்த மல்லிகைப்பூவின் வாசம் காற்றில் கலந்து அவள் மூக்கைத் தொட்டது. கொஞ்சமும் மாறவில்லை. இத்தனை ஆண்டுகளாக இன்னும் அதே வாசம். மல்லிகை பூவுடன் வீசிய அம்மாவின் வாசம்‌. 

______

Comments

Popular Posts