உங்கள் கனவுகளின் வாசல்களில்
எல்லோருக்குமான கனவுகளிலிருந்து
என்னை விடுவித்துக் கொள்கிறேன்
எந்த பெருங்கொள்கைகளுக்காகவும் இல்லை
எந்த தனித்துவ அடையாளத்திற்காகவும் இல்லை
என்னால் பொருந்திக் கொள்ள
முடியாததால் மட்டுமே
என் கனவுகளின் பேரபாயங்களில்
எப்போதும் தனித்துவிடப்பட்டு
விடியலைத் தேடி அலைகிறேன்
பல்லாயிரம் பிரக்ஞைகளின் கூட்டாய்
எல்லோருக்குமான கதகதப்பாய்
பெருங்கனவு ஒன்று இருக்கிறது.
அதில் உள்நுழைந்து பார்க்கிறேன்
இந்த பிரம்மாண்ட கனவின்
வரையறைகளுக்குள்
சிரித்துக் கொண்டும்
சிலாகித்துக்கொண்டும்
வாழ்த்திக் கொண்டும்
வாழ்ந்துக் கொண்டும்
எத்தனையோ பேர்கள்.
அதிசயமாக இருக்கிறது
அழகாக இருக்கிறது
ஆனால் இப்பெருங்கனவு எனக்கு
அச்சுறுத்துவதாக இருக்கிறது
எல்லோருக்குமானதாக இருப்பினும்
இது எனக்கானதாக இருக்க முடியவில்லை
இப்பெரும் கனவிலிருந்து
விழித்துக் கொண்டுவிடுகிறேன்
பொருந்த முடியாத என்னை
விடுவித்துக் கொண்டுவிடுகிறேன்
சத்தியமாய் சொல்கிறேன்
எந்த பெருங்கொள்கைகளுக்காகவோ
தனித்துவ அடையாளத்திற்காகவோ
வெளிவந்துவிட்ட ஆறுதலும் கூட இல்லை
என்னால் இங்கு
இயல்பில் இருக்க முடியவில்லை
எல்லோருக்குமானதை
எனக்கானதாய் என்னுடையதாய்
மாற்றிக் கொள்ள தெரியவில்லை
என்னால் முடிந்தது
உங்கள் கனவுகளின்
வாசல்கள் வரை வருவது
உங்களைப் பார்த்து ஆச்சரியப்பது
என்னை உள்ளே மட்டும் வர சொல்லாதீர்கள்...
- 25/02/2026
Very nice 🙏😆
ReplyDelete