பகற்கனவுகள்
இரவின் கிளைகளை
ஆட்டிக் கொண்டிருக்கிறேன்
ஒரு நல்ல கனவாவது விழட்டுமென்று.
ஒன்றிலிருந்து இன்னொன்று என்று
கனவுகள் இலைகளாய் உதிர்ந்து
என் மடி நிறைகிறது.
ஆனால் இந்த கனவுக் குவியலில்
எவ்வளவு தேடியும்
நற்சொப்பனங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.
எண்ணங்களின் கூட்டுவிரிப்பே
கனவு என்கிறார்களே, உண்மையா?
என் எண்ணங்களில் அதிருப்திகளும்
அவநம்பிக்கைகளும் காரணங்களில்லா
பயங்களும் தான் நிறைந்திருக்கின்றனவா?
எப்படியோ,
என் பகற்கனவுகளாவது
சுகமானதாக இருக்கிறதே.
இப்போதைக்கு அதை வைத்து
பிழைத்துக் கொள்ளலாம்.
- காயத்ரி தமிழன்
April 09
Comments
Post a Comment