இதுதான் என் கடவுள்

இதுதான் என் கடவுள்

மூன்று மாதங்களுக்கு முன் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. அதற்கு முன் எப்போது கோவிலுக்கு போனேன் என்று நினைவில்லை. ஒரு வருடம் இருக்கலாம். ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு சென்றவர்களுக்கு தெரியும். அந்த கோவிலின் அமைதியும் சூழலும் ஒருவித புத்துணர்வை அளித்தது. கூட்டம் பரபரப்பு என்றில்லாமல் ஆரவாரங்கள் இல்லாத அந்த அமைதி எனக்கு பிடித்திருந்தது. தன்னிச்சையாக அந்த இயல்பிற்கு பழகியிருந்தேன். சலனமற்று ஒருமித்த மனதுடன் சிற்ப வேலைப்பாடுகளை ரசிக்க முடிந்தது. ஏதேனும் கவனச்சிதறல்கள் இருந்ததென்றால் அது நான் புகைப்படங்கள் எடுக்க முயன்றதால் ஏற்பட்டதே தவிர என் தனிப்பட்ட ஏகாந்தத்தில் எந்த இடையூறுகளும் இருந்திருக்கவில்லை.
இப்படி கோவிலை சுற்றி பார்க்க எனக்கு இருந்த ஆசையும் ஆவலும் பிரகாரத்தில் இருந்த கடவுளை 'தரிசிக்க' இருக்கவில்லை. எனக்கு வழிபாடுகளில் நம்பிக்கை இல்லை என்றாலும் பேருக்கு என்று கடவுளை பார்த்துவிட்டு வந்திருக்கலாம். ஆனால் நான் போகவில்லை. ஏன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். எனக்கு விருப்பமில்லை என்பது ஆகப்பொருந்தும் பதிலாக தோன்றினாலும் யோசித்தேன்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்வது அத்தனை சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் பல சமயங்களில் பேச்சை வளர்க்காமல் சுலபமாக முடித்துக் கொள்ள அப்படி சொல்லிவிடுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உங்கள் கடவுள் மீது இல்லை. உங்கள் வழிபாடுகள் மீதும் உங்கள் நோன்பு விரதங்கள் மீதும் இல்லை. இதை சொன்னால் உங்களுக்கு புரியுமா?

எனக்கு கடவுள் என்பது ஒரு ஆறுதலுணர்வு. என் கடவுளுக்கு எந்த சம்பிரதாயங்களும் அவசியமில்லை. ஏன், தொடர் வழிபாடுகள் கூட வேண்டியதில்லை. என் கடவுள் நேர்த்திக் கடன்களை எதிர்பாராத கஷ்டம் வந்தால் மட்டுமே நினைவுக்கு வரும் அதிசய கடவுள். இந்த கடவுளுக்கு உருவமும் பெயரும் இல்லை. அந்த நொடி தோன்றும் எந்த பெயரில் அழைத்தாலும் கிட்ட இருக்கிற ஆறுதல் கிட்டும். அதற்கு பிறகு வேண்டுதல்கள் என்று நானேதும் செய்யப்போவதில்லை. அவ்வளவு என்ன, என் கடவுள் அடுத்த முறை தேவைப்படும் வரை என் நினைவுக்கு கூட வரப் போவதில்லை. 

என் கடவுள் என்னை மீறிய ஒரு சக்தியாகவோ‌ என்னை காப்பாற்றும் பிரபஞ்ச நியதியாகவோ இருக்கவில்லை. என் கடவுள் வெறும் உணர்வு தான். எனக்காக நானே உருவாக்கிக் கொண்ட ஒரு ஆறுதல் உணர்வு. எனக்கு 'கடவுள்' என்பது ஒரு ஆறுதலாக (solace-ஆக) மட்டுமே இருக்கையில் உங்கள் கடவுளுக்கு முன் கைக்கூப்பி நிற்க என்னால் முடிவதில்லை. இதையெல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியவா போகிறது. அதனால் தான் நான் என் கடவுளை ஒளித்து வைத்துக் கொண்டு உங்களிடம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறேன்.
-×-×-×-


Comments

Popular Posts