இன்னுமொரு ப்ரிவிலேஜ்ட் கவிதை
என் கவிதைகளை புரட்டிப் பார்க்கறேன்
என்னால் எழுத முடியும்
என்பதற்காகவே எழுதிய கவிதைகள்;
என்னைப் பார்த்தேயிராதவர்களுக்காக
ஏங்கி நிற்கும் கவிதைகள்;
என் வீட்டு பூனையின் பசியை பற்றிய கவிதை;
என் அக்காவின் குழந்தை கீழே விழுந்துவிட்ட
சோகத்தை பாடிய கவிதை;
மறைந்துபோன வானவில்லை
படமெடுத்த கவிதை;
வாடிய பூக்களுக்கு முகாரி எடுத்த வரிகள்;
விரிசல் விட்ட ஓட்டு வீட்டின்
ரிப்பேராகிப்போன ரேடியோவை பாடிய வரிகள்;
இன்னும் இன்னும் எத்தனையோ...
இன்றும் எழுதுகிறேன்
மீண்டும் ஒரு ப்ரிவிலேஜ்ட் கவிதை
மூழ்கி மூச்சிறைந்து கொண்டிருப்பவர்களின்
கதறல்கள் எட்டாதவர்களுக்காக
மிதந்து கொண்டே
ஆழத்தின் அழுத்தத்தை பேசுகிறேன்
அரிதாரம் பூசிக்கொண்டு
அவர்களாகவே பாவித்து
போலியாய் உயிர்விட்டுக் கொண்டிருக்கின்றன
இவ்வெழுத்துக்கள்...
குரல்வளையங்கள் அற்றுப்போன
அவர்களை கடக்கையில்,
உயிர் பிழிந்தெழுதி வற்றிப்போன
வெற்றுடல்களை தாண்டுகையில்
நாணி சாகின்றன
என்னால் பிறந்து தொலைத்த இக்கவிதைகள்
பரவாயில்லை,
இந்த குவியலில், இன்னும்
ஒரு பொய்துயர் கவிதைக்கு இடமிருக்கிறது
எழுதுகிறேன்
இன்னுமொரு ப்ரிவிலேஜ்ட் கவிதை
- காயத்ரி தமிழன்
28/08/23
Comments
Post a Comment